T20 WC 2024: ரிஷாத் ஹொசைன் அபார பந்துவீச்சு; நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்ட் மைதானத்தில்ந் நடைபெற இருந்த இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய நிலையில், மறுபக்கம் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு ரன்னிலும் அவரைத்தொர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் தன்ஸித் ஹசனுடன் இணைந்த அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த தன்ஸித் ஹசன் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோயும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாகிப் அல் ஹசன் தனது 14ஆவது சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மாறுபக்கம் அவருடன் இணைந்து அதிரடி காட்டி வந்த மஹ்முதுல்லா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன் 9 பவுண்டரிகளுடன் 64 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்துள்ளது. நெதர்லாந்து அணி தரப்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வான் மீகெரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டிம் பிரிங்கிள் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மைக்கேல் லெவிட் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 12 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ் ஓடவுட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த விக்ரம்ஜித் சிங் மற்றும் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்ரம்ஜித் சிங் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பாஸ் டி லீட் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ரிஷாத் ஹொசைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இவர்களைத்தொடர்ந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 25 ரன்களுக்கும், லோன் வான் பீக் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, நெதர்லாந்து அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆர்யன் தத் 15 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
இதனால் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.