T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதனையடுத்து இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவர்ல் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அனிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த்தும் ரன்கள் ஏதுமின்றி கேஷவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனால் இந்திய அணி 34 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த அக்ஸர் படேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினார்.
இதில் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்து. இதில் சிறப்பாக விளையாடிய இருவரும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்து தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இருப்பினும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மார்கோ ஜான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து இறுதியில் ஷிவம் தூபே 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேசவ் மஹாராஜ், ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்ஜோ ஜான்சென், காகிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.