T20 WC 2024, Semi Final 2: அக்ஸர், குல்தீப் சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து; 10-ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டி முன்னேறி இந்தியா சாதனை!

Updated: Fri, Jun 28 2024 01:40 IST
T20 WC 2024, Semi Final 2: அக்ஸர், குல்தீப் சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து; 10-ஆண்டுகளுக்கு பிறகு இறுதி (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமாக தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் விராட் கோலி சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 9 ரன்களில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 40 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடிய நிலையில் இந்திய அணி 8 ஓவர்களில் 63 ரன்களை எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தாமதமானது. இருப்பினும் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட அதிரடி காட்டிய நிலையில் அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் ஓரளவு தாக்கு பிடித்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் அக்ஸர் படேல் ஒரு சிக்ஸருடன் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண் மற்றும் ரீஸ் டாப்லீ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அக்ஸர் படேல் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட்டும் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய மொயீன் அலி 8 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். 

ஆனால் மறுமுனையில் களமிறங்கிய சாம் கரன் 2 ரன்களுக்கும், ஹாரி புரூக் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களிலும், அடுத்து வந்த கிறிஸ் ஜோர்டன் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப இங்கிலாந்து அணி 72 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோனும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் இங்கிலாந்து அணியின் தோல்வியும் அந்த இடத்திலேயே உறுதியானது. 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி சாதித்துள்ளது. இதையடுத்து நாளை ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை