T20 WC 2024: இமாத், ஷாஹீன் அபார பந்துவீச்சு; அயர்லாந்தை 106 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!

Updated: Sun, Jun 16 2024 21:46 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் லீக் சுற்றுடனே தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஃபுளோரிடாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முதல் ஓவரை ஷாஹீன் அஃபிரிடி வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பால்பிர்னியும், ஐந்தாவது பந்தில் லோர்கன் டக்கரும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பால் ஸ்டிர்லிங் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பேர் மற்றும் ஜார்ஜ் டக்ரேல் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதன் காரணமாக அயர்லாந்து அணி 32 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் இணைந்த கரேத் டெலானி மற்றும் மார்க் அதிர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதிலும் குறிப்பாக கரேத் டெலானி சிக்ஸர்களை விளாசி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த கரேத் டெலானி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் அதிரும் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஜோஷுவா லிட்டில் 21 ரன்களைச் சேர்க்க, அயர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை