ஷாஹீன், அமீர் அபார பந்துவீச்சு; பவர் பிளேவிலேயே பாதி அணியை இழந்த அயர்லாந்து!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ள பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. புளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆறுதலைத் தேடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஆண்ட்ரூ பால்பிர்னி க்ளீன் போல்ட் ஆனதுடன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கரும் 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில் அதே ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங்கும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் முகமது அமீரின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர் மற்றும் ஜார்ஜ் டக்ரேல் ஆகியோரும் அடுத்தடுத்து அமீர் மற்றும் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதன் காரணமாக அயர்லாந்து அணி முதல் 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்ததுடன் 32 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இப்போட்டியின் முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.