டி20 உலகக்கோப்பை: சதமடித்த ஜோஸ் பட்லர்; இலங்கை அணிக்கு 164 டார்கெட்!

Updated: Mon, Nov 01 2021 21:20 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜேசன் ராய் 9, டேவிட் மாலன் 6, பேர்ஸ்டோவ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - ஈயான் மோர்கன் இணை எதிரணி பந்துவீச்சை சமாளித்து விக்கெட் இழப்பை தடுத்தடுத்து. வழக்கமாக அதிரடி ஆட்டத்தில் வெளுத்து வாங்கும் ஜோஸ் பட்லர் இன்றைய தினம் 45 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

அவருக்கு இணையாக ஈயான் மொர்கனும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் சிறுக சிறுக உயர்ந்தது. பின் 18ஆவது ஓவரிலிருந்து தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் சிக்சர் மழை பொழிந்தார். 

அதன்பின் 40 ரன்களில் கேப்டன் ஈயான் மோர்கன் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஜோஸ் பட்லர் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்சர் விளாசி தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவு செய்தார். 

இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் எனும் பெருமையையும் பெற்றார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்களைச் சேர்த்தது.

Also Read: T20 World Cup 2021

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 67 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசி 101 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை