டி20 உலகக்கோப்பை: மஹ்முதுல்லா அரைசதம்; 182 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்!
டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய தகுதிச்சுற்று போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பப்புவா நியூ கினியை எதிர்கொண்ட வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் ஷகிப் அல் ஹசனும் லிட்டன் தாஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். நல்ல பார்ட்னர்ஷிப் பில்ட் ஆகிவந்த நிலையில், லிட்டன் தாஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் 5 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து நன்றாக ஆடிவந்த மற்றொரு சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேப்டன் மஹ்மதுல்லா, பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி 27 பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதம் அடித்த மாத்திரத்தில் ஆட்டமிழந்தார்.
28 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்களுக்கு மஹ்மதுல்லா ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் சைஃபுதின் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி சிறப்பாக முடித்துக்கொடுத்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனால் 20 ஓவரில் 181 ரன்களை குவித்த வங்கதேச அணி, 182 ரன்கள் என்ற கடின இலக்கை பப்புவா நியூ கினிக்கு நிர்ணயித்துள்ளது.