டி20 உலகக்கோப்பை: வாழ்வா சாவா ஆட்டத்தில் மோதும் இந்தியா - நியூசிலாந்து!
ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இதில் குரூப் 2வில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2ஆவது லீக்கில் நியூசிலாந்துடன் இன்றிரவு துபாயில் மோதுகிறது. நியூசிலாந்தும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது.
இரு அணிக்குமே இது வாழ்வா-சாவா போட்டி ஆகும். அதாவது இந்த பிரிவில் பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் கம்பீரமாக (6 புள்ளி) முதலிடம் வகிக்கிறது. அந்த அணி எஞ்சிய இரு லீக்கில் ஸ்காட்லாந்து, நமிபியாவை சந்திக்க உள்ளது. அதனால் பாகிஸ்தான் அரைஇறுதி சுற்றை எட்டுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
மற்றொரு அரைஇறுதி வாய்ப்பில் நீடிப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்குத் தான் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். ஏனெனில் இதன் பிறகு மீதமுள்ள 3 ஆட்டங்களில் பலம் குறைந்த ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளைத் தான் இந்தியா, நியூசிலாந்து அணிகள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இந்த ஆட்டங்களில் இரு அணிகளுமே வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களுமே முழுமூச்சுடன் வரிந்துகட்டுவார்கள் என்று நம்பலாம்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (3 ரன்), ரோகித் சர்மாவின் (0) மோசமான பேட்டிங் பின்னடைவை ஏற்படுத்தியது. கேப்டன் விராட் கோலி (57 ரன்), ரிஷாப் பண்ட் (39 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கவில்லை. இந்தியா எடுத்த 151 ரன்கள் ஓரளவு நல்ல ஸ்கோர் என்று பார்த்தால் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்தே இந்த இலக்கை எட்டிப்பிடித்து விட்டனர். பந்து வீச்சும் இந்தியாவுக்கு சொதப்பியது.
இதனால் இந்திய அணியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்தாலும், கேப்டன் விராட் கோலி அணியில் மாற்றம் செய்யமாட்டார் என்றே தெரிகிறது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வலை பயிற்சியின் போது பந்துவீச தொடங்கியுள்ளார். அவர் போட்டியில் ஓரிரு ஓவர்கள் பந்து வீசினால் நெருக்கடி குறையும். எல்லாவற்றுக்கும் மேலாக பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும்.
நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 134 ரன் மட்டுமே எடுத்த போதிலும், பந்து வீச்சில் மிரட்டியது. 19 ஓவர் வரை போராடித் தான் பாகிஸ்தான் இலக்கை அடைய முடிந்தது. டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி என்று நியூசிலாந்து அணி பந்து வீச்சில் வலுவாக தென்படுகிறது. பேட்டிங்கில் கப்தில், கேப்டன் வில்லியம்சன், டேவன் கான்வே உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உத்தேச அணி
இந்தியா - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா
Also Read: T20 World Cup 2021
நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டேவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டிம் செய்ஃபெர்ட், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ட்ரென்ட் போல்ட்.