டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது நமீபியா!
எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடரான ஆஸ்திரேலியாவில் இன்று கோலாகமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் முதல் சுற்று போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் பலப்பரீசை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய நமீபியா அணியின் மைக்கேல் மற்றும் திவான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது. லோப்டி ஈட்டன் பொறுப்புடன் விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் சேர்க்க, பவர்பிளே முடிவில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டை நமிபியா அணி இழந்தது. நடுவரிசையில் ஸ்டிபன் பார்ட் மற்றும் கேப்டன் எராஸ்மஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஸ்டிபன் 26 ரன்கள் எடுத்த நிலையில், பெரிய ஷாட் அடிக்க முயன்று எராஸ்மஸ் 20 ரன்களில் வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் நமிபியா அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், அப்போது களத்துக்கு வந்த ஜென் ஃப்ரைலிங் மற்றும் ஜேஜே ஸ்மிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பவுண்டரிகள் மற்றும் சிக்சராக மாற்றி இலங்கை வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
சிறப்பாக விளையாடிய ஃப்ரைலிங்க் 28 பந்தில் 44 ரன்கள் விளாச, ஸ்மிட் 16 பந்தில் 31 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் நமிபியா அணி 163 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 5 ஓவரில் அந்த அணி 68 ரன்களை விளாசியது. இலங்கை வீரர் பிரமோத் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு நமீபிய பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவிலேயே அதிர்ச்சி கொடுத்தனர். குசால் மெண்டிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து பதும் நிஷங்கா, தனுஷ்கா குணத்தில்கா ஆகியோர் ஷிகொங்கோவின் அடுத்தடுத்து பந்துகளில் ஆட்டமிழந்து பெவிலியனுகு நடையைக் கட்டினர்.
இதனால் பவர்பிளேவிலேயே இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்ஷா - கேப்டன் தசுன் ஷானகா இணை ஓரளவு நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.
பின் 20 ரன்களில் ராஜபக்ஷாவும், 29 ரன்களில் தசுன் ஷான்காவும் விக்கெட்டுகளை இழக்க, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதனால் 19 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, இலக்கை அணிக்கெதிராக தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளது.