உங்களிடம் யார் வேண்டுமானலும் இருக்கலாம், எங்களிடம் விராட் கோலி உள்ளார் - அக்ஸர் படேல்!
டி20 உலக கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டையும் வெற்றி பெற்று இந்திய அணி தனது குரூப்பில் முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியை நான்கு விக்கெடுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, அக்டோபர் 27ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் மோதியது.
அதிலும் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பார்மை இழந்திருந்த கேப்டன் ரோகித் சர்மா இப்போட்டியில் 53 ரன்கள் அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பினார். விராட் கோலி இந்த உலகக் கோப்பை இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 44 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்தார். வந்தவுடனேயே வெளுத்து வாங்கிய சூரியகுமார் 25 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயரே எடுத்துச் சென்றார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இப்படி சிறப்பான ஃபார்மில் இருப்பது ஆரோக்கியமாக தெரிகிறது.
இந்தியா தனது மூன்றாவது போட்டியை ஞாயிற்றுக்கிழமை அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. தென்னாபிரிக்காவுக்கு வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி வங்கதேச அணிக்கு எதிராக 205 ரன்கள் அடித்திருந்தது. அதே நேரம் வங்கதேச அணியை 101 ரன்களுக்குள் சுருட்டி 104 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆண்ட்ரிக் நார்கியா 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.
இப்படி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான ஃபார்மில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் எவ்வளவு பெரிய வீரர்கள் இருந்தாலும், இந்தியாவிடம் சிறந்த பார்மில் இருக்கும் விராட் கோலி இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் பேட்டி அளித்துள்ளார் அக்சர் பட்டேல்.
அதில் “தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடுவதற்கு திட்டங்கள் வகுத்து வருகிறோம். நெதர்லாந்து போட்டிக்கு முன்னரே தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதும் போட்டிக்கான பணிகள் தொடங்கி விட்டன. அவர்களிடம் நார்க்கியா, மற்றும் ரபாடா போன்ற வீரர்கள் இருக்கலாம்.
ஆனால் நாங்கள் சிறந்த பார்மில் இருக்கும் விராட் கோலியை வைத்திருக்கிறோம். மேலும் மைதானத்தில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் அதிகமாக ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அதற்கும் திட்டங்கள் வகுத்திருக்கிறோம். எங்களிடம் எந்தவித தயக்கமும் இல்லை.” என்று பதில் அளித்தார்.