டி20 உலகக்கோப்பை: பாரபட்சமின்றி வெளுத்து வாங்கிய ஹேல்ஸ், பட்லர்; இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து!

Updated: Thu, Nov 10 2022 16:34 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இதையடுத்து அடிலெய்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்தில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இந்த உலக கோப்பையில் செம ஃபார்மில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, சூப்பர் 12 சுற்றில் 3 அரைசதங்கள் அடித்த நிலையில், இந்த போட்டியிலும் பொறுப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்த கோலி 50 ரன்களுக்கு கிறிஸ் ஜோர்டானின் பந்தில் அடில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து 18ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கோலியுடன் இணைந்து அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா, கோலி ஆட்டமிழந்த பின்னரும் அதிரடியை தொடர்ந்தார். சாம் கரன் வீசிய 19ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். அந்த ஓவரில் ரிஷப் பண்ட்டும் ஒரு பவுண்டரி அடிக்க, 19ஆவது ஓவரில் இந்திய அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, 20 ஓவரில் 168 ரன்களை குவித்து, 169 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. விராட் கோலி 40 பந்தில் 50 ரன்களும், ஹர்திக் பாண்டியா 33 பந்தில் 63 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி மிரளவைத்தனர். 

இந்திய அணியின் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியான், அக்ஸர் படேல், அஸ்வின் என எந்த பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் இருவரும் பிரித்து மேய்ந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி அலெக்ஸ் ஹேல்ஸ் 28 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தைய ஜோஸ் பட்லரும் அரைசதம் கடந்தார். இதனால் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களைக் கடந்தது. 

இதனால் 16 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து, நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

இங்கிலாந்து தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களையும், கேப்டன் ஜோஸ் பட்லர் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை