டி20 உலகக்கோப்பை: தோல்வி பயத்தை கண்முன் நிறுத்திய லிட்டன் தாஸ்; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!

Updated: Wed, Nov 02 2022 17:51 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குரூப் 1இல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கு இடையே அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது. குரூப் 2இல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றாலும், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கும் இன்னும் பின்புற வாய்ப்புள்ளது. 

எனவே கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துக்கு எதிராக ஆடிவருகிறது. வங்கதேசத்துக்கும் வெற்றி முக்கியம். அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடா நீக்கப்பட்டு மீண்டும் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். முதல் 3 போட்டிகளிலும் சரியாக ஆடாத கேஎல் ராகுல் மீது பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இந்த போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். தனது டிரேட்மார்க் ஷாட்களை ஆடிய ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்து, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

விராட் கோலி நிலைத்து நின்று நிதானமாக ஆட, சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடி 16 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா(5), தினேஷ் கார்த்திக்(7), அக்ஸர் படேல் ஏமாற்றமளித்தனர். ஆனால் மறுமுனையில் நிலைத்து ஆடிய விராட்  கோலி அரைசதம் அடித்தார். இந்த உலக கோப்பையில் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக அரைசதம் அடித்த கோலி, 3ஆவது அரைசதத்தை இன்று அடித்தார்.

19ஆவது ஓவரில் கோலி சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, கடைசி ஓவரில் அஸ்வின் சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, 20 ஓவரில் இந்திய அணி 184 ரன்களை குவித்தது. விராட் கோலி 44 பந்தில் 64 ரன்களை குவித்தார். அஷ்வின் 6 பந்தில் 13 ரன்கள் அடித்தார். வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் யாரும் எதிர்பாராத தொடக்கத்தைக் கொடுத்தார். முதல் பந்திலிருந்து அதிரடி காட்டத்தொடங்கிய லிட்டன் தாஸ் இந்திய அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர்களுமாக விளாசி மிரட்டினார். 

ஒரு கட்டத்தில் அவர் 21 பந்துகளில் அரைசதத்தைப் பதிவு செய்ய, மறுமுனையில் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய நஹ்முல் ஹொசைன் வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்வி ரசிகர்களை பரபரப்படைய செய்தது.

அதன்பின் 7 ஓவர்கள் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வங்கதேச அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து மீண்டும் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கும் பேரதிர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்து ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இது ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக இந்தியா பக்கம் திருப்பியது. 

அதன்பின் நஜ்முல் ஹொசைன் 21 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 13 ரன்களிலும் அட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, மொசடெக் ஹொசைன் ஆகியோரை அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் வெளியேற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இதனால் கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் வீச அதனை எதிர்கொண்ட நூருல் ஹசன் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அடித்து ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினார். இதனால் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அதனை எதிர்கொண்ட நூருல் ஹசன் ஒரு ரன்னை மட்டுமே எடுத்தார்.

இதன்மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை