லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள ஒருநாள் தொடரின் முடிவில் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வங்கதேச அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாடாத லிட்டன் தாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணியின் துணைக் கேப்டனாக ஜக்கர் அலி தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டுகிறது.
முன்னதாக ஆசிய கோப்பை தொடரின் போதும் லிட்டன் தாஸ் அணியில் இடம்பெறாத சமயத்தில் ஜக்கர் அலி அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இடம் பிடித்திருந்த முகமது சௌஃபுதின் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதவிர ரிஷாத் ஹொசைன், தாவ்ஹித் ஹிரிடோய், தஸ்கின் அஹ்மத், தன்ஸித் ஹசன் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
வங்கதேச டி20 அணி: லிட்டன் குமர் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், சைஃப் ஹாசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம்.
Also Read: LIVE Cricket Score
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அமீர் ஜாங்கு, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ரமோன் சிம்மண்ட்ஸ்