டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழன்; இலங்கையை 152 ரன்னில் சுருட்டியது யுஏஇ!
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவாது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 6ஆவது போட்டியில் இலங்கை - ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுஏஇ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - தனஞ்செய டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய தனஞ்செய 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதையடுத்து களமிறங்கும் வீரர்கள் இறுதியில் அதிரடி காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
அப்போது ஆட்டத்தின் 15ஆவது ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன் ஓவரின் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பந்துகள் முறையே பனுகா ராஜபக்ஷா (5), சரித் அசலங்கா (0), தசுன் ஷனகா (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது வீரர் எனும் சாதனையை கார்த்திக் மெய்யப்பன் படைத்துள்ளார்.
அதன்பின் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பதும் நிஷங்கா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் 74 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்கா, பசில் ஹமீதின் சூப்பர் மேன் கேட்ச்சின் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. யுஏஇ அணி தரப்பில் கார்த்திக் மெய்யப்பன் 3 விக்கெட்டுகளையும், ஸஹூர் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.