டி20 உலகக்கோப்பை: மற்றுமொரு வீரருக்கு காயம்; பெரும் பின்னடைவில் இங்கிலாந்து!
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளன. இந்தச் சூழலில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், அவர் அணியுடன் பயிற்சியில் இணையவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே அந்த அணியின் பேட்ஸ்மேன் டேவிட் மலான் காயம் காரணமாக அரையிறுதி போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. அவருக்கு மாற்றாக பில் சாலட் விளையாடுவார் எனத் தெரிகிறது. இந்தச் சூழலில் மார்க் வுட்டுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மலான் மற்றும் மார்க் வுட் என இருவரும் இன்று பயிற்சியில் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். அதோடு மணிக்கு சராசரியாக 140 கிலோமீட்டருக்கும் கூடுதலான வேகத்தில் பந்து வீசி வருகிறார். இறுதி ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி உள்ளார். இந்தத் தொடரில் இவரது அவர் வீசிய அதிவேக பந்து 154.74 கிலோமீட்டராக பதிவானது. இதனை நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவர் வீசி இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவுதான். அவருக்கு மாற்றாக தைமல் மில்ஸ் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.