டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 127 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஒன்றில் இடம்பிடித்திருந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அதேசமயம் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள அணிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்திடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், வாழ்வா சாவா ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்ச் செய்ய தீர்மானித்து களமிறங்கிய நிலையில் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் 10 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய சௌமியா சர்க்கார் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் நஜ்முல் ஹொசைன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அதன்பின் 20 ரன்கள் எடுத்த நிலையில், ஷதாப் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் சர்ச்சையான முறையில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
ஏனெனில் பந்து பேட்டில் பட்டிருந்து மூன்றாம் நடுவர் அதற்கு எல்பிடபிள்யு முறையில் அவுட் கொடுத்த சம்பவம் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், திருப்புமுனையாகவும் அமைந்தது. அதன்பின் 54 ரன்களைச் சேர்த்திருந்த நஜ்முல் ஹொசைன் இஃப்திகார் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினர்.
அதனைத் தொடர்ந்து ஆட்டத்தி 17ஆவது ஓவரை வீசிய ஷாஹின் அஃப்ரிடி, மொசடெக் ஹொசை, நுருல் ஹசன் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்த்து.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும், சதாப் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.