ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 135 ரன்களில் சுருட்டிய வங்கதேச அணி!
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. அதேசமயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணிக்கான போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் உள்ளன. அதன்படி இன்று நடைபெறும் 5ஆவது சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 4 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த சைம் அயுப்பும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 13 ரன்னிலும், கேப்டன் சல்மான் அலி ஆக 19 ரன்னிலும், உசைன் தாலத் 3 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடி தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 71 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த முகமது ஹாரிஸ் - முகமது நவாஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். பின்னர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களைச் சேர்த்த கையோடு முகமது ஹாரிஸும் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களைச் சேர்த்திருந்த முகமது நவாஸும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஃபஹீம் அஷ்ரஃப் 13 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
Also Read: LIVE Cricket Score
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.