டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி!

Updated: Thu, Oct 27 2022 12:22 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2இல் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா ஃபார்மில் இல்லாத நிலையில், இந்த போட்டியிலும் வெறும் 2 ரன்னுக்கு வெளியேறினார். அதன் பின்னர் டி காக்குடன் ஜோடி சேர்ந்த ரைலீ ரூஸோவ் வங்கதேச பவுலிங்கை அடித்து நொறுக்கினார்.

டி காக் மற்றும் ரூஸோவ் ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து விளாசி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். 2ஆவது விக்கெட்டுக்கு ரூசோ - டி காக் இருவரும் இணைந்து 81 பந்தில் 168 ரன்களை குவித்தனர். இதில் அரைசதம் அடித்த டி காக் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதமடித்த ரைலீ ரூசோ, 56 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 109 ரன்களை குவித்தார். டி20 உலக கோப்பையில் சதமடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரைலீ ரூஸோவ் படைத்தார். 

மேலும் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த 5ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ரூஸோவ் - டி காக் அதிரடியால் 20 ஓவரில் 205 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்க அணி, 206 ரன்களை வங்கதேசத்துக்கு இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு நஜ்முல் ஹொசைன் - சௌமியா சர்க்கார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அவர்களால் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நிடிக்க முடியவில்லை.

அதன்பின் 9 ரன்களில் நஜ்முல் ஹொசைனும், 15 ரன்களில் சௌமியா சர்காரும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் ஒரு ரன்னுடன் பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர். அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

மறுமுனையில் மூன்றாவது வீரராக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லிட்டன் தாசும் 34 ரன்களில் விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளையும், தப்ரைஸ் தம்ஸி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை