டி20 உலகக்கோப்பை: சீட்டுக்கட்டாய் சரிந்த டாப் ஆர்டர்; தனி ஒருவனாக போராடிய சூர்யகுமார் யாதவ்!

Updated: Sun, Oct 30 2022 18:20 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் மிகச்சிறப்பாக விளையாடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த அணிகளான இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெர்த்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணியில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டார்.

அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் இருவரும் நிதானமாக தொடங்கினர். ராகுல் முதல் ஓவர் முழுக்க ஆடி ஒரு ரன் கூட அடிக்கவில்லை. முதல் ஓவர் மெய்டன் ஓவர் ஆனது. இரண்டாவது ஓவரில் ரோஹித் அபாரமாக ஒரு சிக்ஸர் அடிக்க, 3ஆவது ஓவரில் ராகுலும் அபாரமாக ஒரு சிக்ஸர் அடித்தார். 

இருவரும் அடித்த சிக்ஸரை பார்க்கையில், பெரிய இன்னிங்ஸ் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5ஆவது வது ஓவரை வீசிய லுங்கி இங்கிடி, அந்த ஓவரின் 2ஆவது பந்தில் ரோஹித் 15 ரன்கள் மற்றும் கடைசி பந்தில் ராகுல் 9 ரன்கள் என தொடக்க வீரர்கள் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார். தனது அடுத்த ஓவரும் இன்னிங்ஸின் 7ஆவது ஓவரில் விராட் கோலியையும் 12 ரன்களிலும் இங்கிடி வீழ்த்தினார். 

அடுத்த ஓவரிலேயே தீபக் ஹுடாவை நோர்ட்ஜே டக் அவுட்டாக்கி அனுப்ப, அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் 2 ரன்னில் லுங்கி இங்கிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். இதனால் இந்திய அணி வெறும் 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் எடுத்த நிலையில் அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து மறுமுனையில் சூர்யகுமாருக்கு கம்பெனி கொடுத்து விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 68 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை