T20 WC 2024: வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த ஆஸ்திரேலியா!
ஐசிசி அடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாட் காம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் டிராவிஸ் ஹெட் 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வார்னர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 14 ரன்களுடனும் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியில் படைக்கப்பட்ட சில சாதனைகளை இப்பதிவில் பார்ப்போம்.
ஆஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான வெற்றிகள்
வங்கதேச அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 5 வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் 8ஆவது வெற்றி இதுவாகும். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 7ஆவது வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய தரப்பில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரெட் லீக்கு பிறகு ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஆஸி வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
வங்கதேச அணிக்கு எதிரான இப்போட்டியில் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக அந்த அணியின் பிரெட் லீ, ஆஷ்டன் அகர் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.