இப்போட்டி அழுத்தம் நிறைந்தது கிடையாது - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1இல் இருந்து சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், குரூப் இரண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
இதில் இன்று சிட்னியில் நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும், நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.
இந்த இறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் சிலர் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் ஆகியோர் இந்தியாவை, இங்கிலாந்து அசால்ட்டாக அடித்துவிடும் எனக் கூறி வருகிறார்கள். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரோஹித் ஷர்மா பத்திரிகையாளர் சந்தப்பில் இன்று பேசியுள்ளார்.
இங்கிலாந்தை வீழ்த்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித், ‘‘ஆஸ்திரேலியா மைதானங்களில் இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம் என பலர் கூறுகிறார்கள். நீங்களும் அதனை மனதில் வைத்துதான் கேள்வி எழுப்புகிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றினோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆகையால், எங்களுக்கு இப்போட்டி அழுத்தம் நிறைந்தது கிடையாது. மேலும், இத்தொடர் முழுவதிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். இதனால், இங்கிலாந்தை வீழ்த்துவோம் என எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்.
கடந்த ஜூலை மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அப்போது சூர்யகுமார் யாதவ் 3 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 171 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். தற்போது சூர்யகுமார் யாதவ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால், நாளை இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நீங்கள் அரையிறுதியில் பங்கேற்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித், ‘‘நிச்சயம் பங்கேற்பேன். பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அது மிகச்சிறிய காயம்தான். அது அப்போதே சரியாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.