டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படிவுள்ளது?
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது 3ஆவது போட்டியாக தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்களை குவித்தது. இதன்பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 137 ரன்களை எடுத்து வெற்றி கண்டது.
தென் ஆப்பிரிக்க அணியுடனான முக்கியமான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், இனி அரையிறுதி வாய்ப்பு எப்படி உள்ளது? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். எதிர்பார்த்ததை போன்றே இந்திய அணிக்கு இனி சிக்கல் அதிகம் தான் எனக்கூறலாம். ஏனென்றால் இனி வரக்கூடிய இரண்டு போட்டிகளுமே இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலைமை தான்.
புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துவிட்டது. இந்தியா 4 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. ரன்ரேட்டில் குறைந்துள்ள வங்கதேச அணியும் அதே 4 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா தோற்றதால் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பும் உயிர் பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு அடுத்ததாக வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் போட்டி உள்ளது. இதில் இரண்டிலும் வெற்றி கண்டால் 2ஆவது இடத்தை நிச்சயம் பிடித்துவிடலாம். ஒருவேளை வங்கதேசத்துடன் தோற்றுவிட்டால், இந்தியா 3ஆவது இடத்திற்கும், வங்கதேச அணி 6 புள்ளியுடன் 2ஆவது இடத்திற்கும் சென்றுவிடும். பின்னர் வங்கதேசம், தனது கடைசி போட்டியான பாகிஸ்தானுடன் தோற்ற வேண்டும் என இந்திய வீரர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டி வரலாம்.
ஒருவேளை வங்கதேசத்துடன் வெற்றி பெற்றுவிட்டு, ஜிம்பாப்வே அணியுடன் தோல்வியடைந்துவிட்டாலும், மற்ற அணிகளின் செயல்பாட்டை வைத்து மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும். எனவே இனி வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமே இந்தியாவுக்கு உள்ள நல்ல வாய்ப்பு என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.