ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவிலிருந்து முகமது நபி விலகல்!
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான். இருந்தாலும் இந்தப் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
நாளை இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவுசெய்யாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு பொறுபேற்று அந்த அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகுவாதாக முகமது நபி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “எங்கள் டி20 உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது. நாமும் எங்கள் ஆதரவாளர்களும் எதிர்பார்க்காத முடிவு இது. போட்டிகளின் முடிவுகளால் உங்களைப் போலவே நாங்களும் விரக்தியடைந்துள்ளோம்.
கடந்த ஒரு வருடமாக, எங்கள் அணியின் தயாரிப்பு ஒரு பெரிய போட்டிக்கு ஒரு கேப்டன் விரும்பும் அல்லது தேவைப்படும் அளவிற்கு இல்லை.மேலும், சில கடைசி சுற்றுப்பயணங்களில் அணி நிர்வாகம், தேர்வுக் குழு மற்றும் நான் ஒரே பக்கத்தில் இல்லை, இது அணியின் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தியது.
எனவே, உரிய மரியாதையுடன், நான் எனது கேப்டன் பதிவியை ராஜினாமா செய்வதுடன், நிர்வாகம் மற்றும் குழுவுக்குத் தேவைப்படும்போது எனது நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவேன் என்றும் உடனடியாக அறிவிக்கிறேன்.
மழையினால் போட்டிகள் பாதிக்கப்பட்டாலும் மைதானத்திற்கு வந்த உங்கள் ஒவ்வொருவருக்கும், உலகளவில் எங்களை ஆதரித்தவர்களுக்கும் என் இதயத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பு உண்மையிலேயே எங்களுக்கு நிறைய இருக்கிறது. ஆப்கானிஸ்தான் வாழ்க!” என பதிவிட்டுள்ளார்.