கெயிலின் சாதனையை முறியடித்த ரிஸ்வான்; கோலி சாதனையை சமன் செய்த பாபர்!
ஷார்ஜாவில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்த அணியை 72 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. 190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 ரன்களை ரிஸ்வான் சேர்த்தபோது, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தகர்க்கமுடியாத கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்தார். 2015ஆம் ஆண்டில் கிறி்ஸ் கெயில், 36 டி20 போட்டிகளில், 1665 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் கெயில் 3 சதங்கள், 10 அரைசதங்களை அடித்திருந்தார்.
ஆனால், கெயிலின் 6ஆண்டுக்கு முந்தைய சாதனையை முறியடித்த ரிஸ்வான் இந்த ஆண்டில் 1,676 ரன்கள் சேர்த்தார். இதில் ரிஸ்வான் இந்த ஆண்டில் மட்டும், ஒரு சதம் உள்ளிட்ட 15 அரைசதங்களை அடித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், ஒரே உலகக் கோப்பையில் அதிகமான அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸி. முன்னாள்வீரர் மேத்யூ ஹேடனின் சாதனையை சமன் செய்துள்ளார். 2014ஆம் ஆண்டில் விராட் கோலி 4 அரைசதங்களையும், மேத்யூ ஹேடன் 2007ம் ஆண்டில் 4 அரைசதங்களையும் அடித்திருந்தனர். அதை பாபர் ஆஸம் தற்போது சமன் செய்துள்ளார்.