ஒரு அணியாக இணைந்து கடும் உழைப்பை செலுத்தியுள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாகவே ஹாரி புரூக் 25 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றி எங்களுக்கு மன நிறைவை தருகிறது. இதற்காக நாங்கள் ஒரு அணியாக இணைந்து கடும் உழைப்பை செலுத்தியுள்ளோம். இதில் அனைவரின் பங்கும் உள்ளது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் மைதானத்தின் சூழலுக்கு ஏற்ப விளையாடி வருகிறோம். நானும், சூர்யகுமார் யாதவும் அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களுக்கு முக்கியமானதாக அமைந்தது. இந்தப் போட்டியில் 170 ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என நினைத்தேன். நாங்கள் நினைத்ததைப் போலவே நடந்தது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதன் பிறகு அணியின் பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக செயல்பட்டனர். அக்ஸர் மற்றும் குல்தீப் என இருவரும் சிறப்பாக பந்து வீசி எங்களை வெற்றிபெற வைத்துள்ளனர். அவர்கள் மீதும் ஆட்டத்தில் அழுத்தம் இருந்தது. ஆனால், அதனை அமைதியாக இருந்தபடி தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். விராட் கோலி ஒரு தரமான வீரர். கிட்டத்திட்ட 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருபவருக்கு ஃபார்ம் ஒரு சிக்கலே இல்லை. அவரிடம் இன்டென்ட் உள்ளது. அவரிடமிருந்து சிறப்பான ஆட்டம் இறுதிப் போட்டியில் வெளிப்படும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.