அஸ்வின் வருகை பாசிட்டிவான ஒன்று - விராட் கோலி!
டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டு நேற்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடியது. ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக படு மோசமான தோல்வியை சந்தித்து இருந்ததால் இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி பலமாக மீண்டு வரும் என்று எதிர்பார்த்தபடி நேற்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 74 ரன்களும், ராகுல் 69 ரன்களும் குவித்து அசத்தினர். அதன்பின்னர் ரிஷப் பண்ட் 27 ரன்களும், ஹார்திக் பாண்டியா 35 ரன்களும் குவிக்க இந்திய அணி பெரிய ரன் குவிப்பை எட்டியது.
அதன் பின்னர் தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்ததால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி “இந்த மைதானம் பேட்டிங்க்கு மிகவும் அருமையாக ஒத்துழைத்தது. இரண்டு ஓவர்களை நாம் அடித்து ஆடி விட்டால் நிச்சயம் எதிரணிக்கு நமது பேட்டிங்கின் மூலம் அழுத்தத்தை கொடுக்க முடியும் அதுதான் இன்று நடந்துள்ளது.
சிலமுறை அதில் தவறு ஏற்படலாம் ஆனால் நாம் பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். டாப் 3 வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தால் பின்வரிசையில் பவர் ஹிட்டர்கள் இருக்கின்றனர். இந்த போட்டியில் எங்களது திட்டம் சரியாக செயல்பட்டது.
Also Read: T20 World Cup 2021
நெட் ரேட்டை மனதில் வைத்துதான் விளையாடினோம். அஷ்வினின் கம்பேக் பாசிட்டிவ்வான எண்ணத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் அவர் மிக சிறப்பாக செயல்பட்டார். தற்போது இந்திய அணிக்கு திரும்பிய அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மிடில் ஓவர்களில் அவர் எதிர் அணியை தனது கன்ட்ரோலில் வைத்து இருந்தார்” என்று தெரிவித்தார்.