சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் டேவிட் வார்னர்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் கோப்பையை வெல்லும் அணிகளாக கணிக்கப்பட்ட பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுடன் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சூப்பர் 8 சுற்றில் கடைசி நிமிடம் வரை அரையிறுதிச்சுற்றுக்கான நம்பிக்கையை வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியின் கனவானது ஆஃப்கானிஸ்தானின் வெற்றியின் மூலம் தகர்ந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளயே, அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வர்னர் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அவர் இதுதான் தனது கடைசி தொடர் என்று அறிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி முன்னதாக, இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த டேவிட் வார்னர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றிலிருந்து வெளியேறியதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 110 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் ஒரு சதம், 28 அரைசதங்கள் என 3,277 ரன்களைக் குவித்துள்ளார். மேற்கொண்டு 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள், 33 அரைசதங்களுடன் 6,932 ரன்களையும், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் என 8,786 ரன்களையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள டேவிட் வார்னரின் ஓய்வு முடிவானது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.