தேவைப்பட்டால் குல்தீப், சஹால் இருவரையும் விளையாட வைப்போம் - ராகுல் டிராவிட்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகவும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியின் காம்பினேசன் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவரும் திறமையான வீரர்கள். அவர்கள் யாரையும் விட்டுவிடுவது கடினம். தற்போதுள்ள அணியில் நான்கு வீரர்கள் புறக்கணிக்கப்பட்டாலும், அவர்களிடமும் தரம் உள்ளது. ஆனால் நிலைமை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததன் காரணமாக எங்களால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை.
ஒருவேளை குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாட வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் நாங்கள் அதைப் பற்றி யோசிப்போம். மேலும் தற்போது சில ஆல்ரவுண்டர்கள் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம். அதன் மூலம் எங்களிடம் தற்போது எட்டு பேட்டர்களும், ஏழு பந்துவீச்சாளர்களும் உள்ளனர். அதனால் தேவைப்படும் நேரங்களில் எங்களால் வீரர்களை பயன்படுத்த முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.