ஐபிஎல் தொடரின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு!
இந்தியாவின் மிகப்பிரபல உள்ளூர் டி20 லீக் தொடர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்). உலகம் முழுவது பெருவாரியான ரசிகர்களைக் கொண்டுள்ள ஐபிஎல் தொடர் தான் பிசிசிஐயின் முக்கிய பெருளாதாரம்.
ஐபிஎல் தொடரின் முதல் விளம்பரதாரராக டிஎல்எஃப் 2008 முதல் 2012 வரை இருந்தது. இதன்பின்னர் பெப்சி நிறுவனம் ரூ. 396 கோடியில் 5 வருடங்களுக்கு ஐபிஎல் விளம்பரதாரராகத் தேர்வானது. ஆனால் 2016, 2017ஆம் வருடங்களில் பெப்சியிடமிருந்த ஒப்பந்தம் விவோ நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்க் காரணமாக வருடத்துக்கு ரூ. 100 கோடி மட்டுமே வழங்கியது விவோ.
பின் 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக விவோ நிறுவனம் மீண்டும் தேர்வானது. அடுத்த 5 வருடங்களுக்கு விவோ நிறுவனம் பிசிசிஐ-க்கு ரூ. 2200 கோடி (வருடத்துக்கு ரூ. 440 கோடி) வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இது உண்மையிலேயே மிகப்பெரிய தொகை. கடந்த ஒப்பந்தத்தை விடவும் 554 சதவிகிதம் அதிகம்.
பின்னர் 2020 ஜூன் மாதம் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்தன. மேலும் ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக அறிவித்தன.
ஐபிஎல் 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனத்தைத் தேர்வானதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்தார். ரூ. 222 கோடி வழங்க டிரீம் 11 நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். டிரீம் 11 நிறுவனம் நான்கு மாதங்கள் 13 நாள்களுக்கு ஐபிஎல் 2020 விளம்பரதாரராகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்பிறகு 2021 ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக விவோ நிறுவனம் மீண்டும் தேர்வானது. இந்நிலையில் ஐபிஎல் விளம்பரதாரராக இருந்த விவோ தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு விட்டது.
இதையடுத்து ஐபிஎல் தொடரின் புதிய விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார்.