இங்கிலாந்துடன் இரண்டு டி20 பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா!
இந்த வருடம் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமான ரத்தான 5-வது டெஸ்டை இரு அணிகளும் இம்முறை விளையாடுகின்றன. ரத்தான 5ஆவது டெஸ்ட் ஜூலை 1 அன்று எக்பாஸ்டனில் தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 7இல் தொடங்கி ஜுலை 10 அன்று நிறைவுபெறுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 12இல் தொடங்கி ஜூலை 17 அன்று நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் ஜூலை 1, ஜூலை 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு டி20 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5ஆவது டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த இரு டி20 பயிற்சி ஆட்டங்களும் 5ஆவது டெஸ்ட் நடைபெறும் தினங்களில் நடைபெறவுள்ளன.
இதனால் டெஸ்டில் இடம்பெறாத இந்திய வீரர்கள் இந்த இரு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடவுள்ளார்கள். ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
சென்னையில் ஜூன் 9 அன்று தொடங்கும் டி20 தொடர் ஜூன் 19 அன்று டெல்லியில் நிறைவுபெறுகிறது. அதன்பிறகு அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஜூன் 26, ஜூன் 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்துக்கு எதிராக இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது.