அதிக சம்பளம் வாங்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ்? - தகவல்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக இருந்த டிம் பெயின் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர் கடந்தாண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாள பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பேட் கம்மின்ஸுக்கு ஒரு வருடத்துக்கு ரூ. 9 கோடியே 88 லட்சம் சம்பளம் (1.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) வழங்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் கேப்டனாகப் பணிபுரிவதற்காக வருடத்துக்கு ரூ. 1.10 கோடி (200,000 ஆஸ்திரேலிய டாலர்) கூடுதலாக அவருக்கு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் வருடத்துக்கு 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அவருக்குச் சம்பளமாகத் தருகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்களில் அதிகச் சம்பளம் பெறும் வீரராக கம்மின்ஸ் உள்ளார். இதுகுறித்த தகவல் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஒரு வருடத்துக்கு அதிகச் சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியலில் 2ஆம் இடத்தில் ஹேசில்வுட்டும் (ரூ. 8.78 கோடி) 3ஆம் இடத்தில் டேவிட் வார்னரும் (ரூ. 8.23 கோடி) உள்ளார்கள். ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ. 7.13 கோடி. கடந்த வருடம் 5ஆம் இடத்தில் இருந்த ஹேசில்வுட் இந்த வருடம் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 2ஆம் இடத்திலிருந்து 5ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் அடுத்ததாக விளையாடவுள்ளது. ஜுன் 7 அன்று டி20 தொடர் தொடங்குகிறது.