ஒருநாள் கிரிக்கெட்டின் அழிவிற்கு ஐபிஎல் தான் காரணம் - மைக்கேல் அதர்டன்

Updated: Tue, Jul 26 2022 13:56 IST
Image Source: Google

நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான போட்டிகள் வெவ்வேறு வித்தியாசமான அனுபவங்களையும் சுவாரஸ்யத்தையும் ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வருகிறது. இதுபோக ஒவ்வொரு நாடுகளிலும் ஐபிஎல் போன்ற டி20 ப்ரீமியர் லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதனால் மாதத்திற்கு ஒரு கிரிக்கெட் தொடர் மட்டுமே நடைபெற்ற காலம் தலைகீழாக மாறி தற்போது வருடம் முழுவதும் கிட்டத்தட்ட தினந்தோறும் வெவ்வேறு வகையான கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களுக்கு பரிசாக கிடைக்கின்றன. 

அதன் காரணமாக அதில் விளையாட்டு வீரர்களுக்கும் முன்பை விட நல்ல பணமும் கெளரவமும் கிடைக்கிறது. ஆனால் உலகத்தரம் வாய்ந்த புகழ்பெற்ற நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர்கள் இந்த அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. ஏனெனில் ரசிகர்களிடம் புகழ்பெற்ற அவர்கள் விளையாடினால் தான் அந்த தொடரை அதிகப் படியான ரசிகர்கள் பார்ப்பார்கள். இருப்பினும் அவர்களும் மனிதர்கள் தானே என்ற வகையில் தொடர்ச்சியாக விளையாடும்போது ஏற்படும் களைப்பு வீரர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்தி அவர்களின் ஆட்டத்தில் சோடையை காட்டுகிறது. 

அதனாலேயே விராட் கோலி போன்ற வீரர்கள் இடையிடையே குறிப்பிட்ட சில தொடர்களில் ஓய்வெடுக்கிறார்கள். இருப்பினும் அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக 31 வயதிலேயே இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணிச்சுமை என்பதையும் தாண்டி பணத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் டி20 கிரிக்கெட் தரத்தை நிரூபிக்க டெஸ்ட் கிரிக்கெட் என தங்களுக்கு பிடித்த கிரிக்கெட்டை தேர்வு செய்யும் கிரிக்கெட் வீரர்கள் இரண்டுக்கும் நடுவில் சுவாரசியம் இல்லாமல் இருக்கும் ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை. 

மேலும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளின் வருகையால் சர்வதேச அளவில் நடைபெறும் ஒருநாள் இருதரப்பு தொடர்கள் சுவாரசியமில்லாமல் இருப்பதாக கருதும் வாசிம் அக்ரம் போன்ற சில முன்னாள் வீரர்கள் பேசாமல் அதை நிறுத்தி விடலாம் என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர். போதாக்குறைக்கு சாதாரண தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் 94 போட்டிகள் கொண்ட தொடராக வரும் காலங்களில் விரிவடைய உள்ளதால் சர்வதேச போட்டிகள் அழியத் துவங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் ஐபிஎல் வளர்ச்சியை பார்த்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் டி20 சேலஞ்ச் என்ற பெயரில் புதிய டி20 தொடரை வரும் 2023 ஜனவரியில் நடத்த உள்ளது. அதற்காக அந்த மாதம் ஆஸ்திரேலியாவில் தங்களது தேசிய அணி பங்கேற்கும் ஒருநாள் தொடரையும் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போன்ற சர்வதேசப் போட்டிகளின் வீழ்ச்சிக்கும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களின் ஓய்வுக்கும் ஐபிஎல் தொடரே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன் குற்றம் சாட்டியுள்ளார். 

இது பற்றி பேசிய அவர், “ஐபிஎல் தொடரின் வருகைக்குப் பின்பு நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் கிரிக்கெட் போட்டிகள் ஆபத்தான முக்கிய கட்டத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதிலும் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் பங்கேற்க இருந்த 3 ஒருநாள் போட்டிகளை டி20 தொடருக்காக தென் ஆப்பிரிக்கா ரத்து செய்ததை வைத்து அது உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக நீங்கள் வாதிடலாம்.

அவர்கள் தங்களது நாட்டு வீரர்கள் டி20 தொடரில் பங்கேற்பதற்காக உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பையும் தாரைவார்க்க தயாராக இருக்கிறார்கள். இது சர்வதேச கிரிக்கெட்டுக்கும் பிரீமியர் லீக் கிரிக்கெட்டுக்கும் இடையே சம அளவில் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை வந்து விட்டதாக உங்களுக்கு கூறுகிறது. சர்வதேச இருதரப்பு தொடர்கள் என்ன தருகிறது என்று அனைவரும் நினைக்கிறார்கள்” என கூறினார்.

சமீப காலங்களில் நிறைய இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் தான் கிரிக்கெட் அழிவதற்கு காரணம் என்று இதுபோல குற்றம் சாட்டி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இருப்பினும் ஐபிஎல் தொடரால் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை குறைய துவங்கினாலும் ஒரு காலத்தில் 50 ஓவர்களில் 250 ரன்களை அடிக்க முடியாத இருந்த நிலைமை தற்போது 20 ஓவர்களில் 250 ரன்கள் அடிக்கும் அளவுக்கு கிரிக்கெட்டின் அடிப்படை தரம் உயர ஐபிஎல் உதயமானதே காரணம் என்பதே நிதர்சனம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை