ஐஎல்டி20: வின்ஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!

Updated: Sat, Feb 11 2023 10:41 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 லீக் தொடரின் முதல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 ரன்களிலும், அடுத்து வந்த லோர்கன் டக்கர் 21 ரன்களிலும், மௌஸ்லி 7 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான முகமது வாசீமும் 31 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

பின்னர் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - கீரென் பொல்லார்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பூரன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, பொல்லார்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி    க்கு ஜேம்ஸ் வின்ஸ் - கேப்டன் கிறிஸ் லின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் லின் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த காலின் டி கிராண்ட்ஹோம் 10, எராஸ்மஸ் 12, ஹெட்மையர் 0, டேவிட் வைஸ் 15, பிராத்வைட் 13 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் மறுப்பக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 83 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி ஐஎல்டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை