மகளிர் ஹண்ட்ரெட்: மந்தனா அதிரடியில் சதர்ன் பிரேவ் வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் - ஓவல் இன்விசிபிள் மகளிர் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓவல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணிக்கு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையிலிருந்த டேனியன் வைட், சோபியா டாங்க்லி ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 100 பந்துகள் முடிவில் சதர்ன் பிரேவ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஓவல் இன்விசிபிள் அணியில் லாரன் வின்ஃபீல்ட் 25 ரன்களிலும், கேப்டன் சூஸி பேட்ஸ் 15 ரன்களிலும், ஆலிஷ் கிரான்ஸ்டோன் 18, மரிஸானே கேப் 19, மேடி வில்லியர்ஸ் 6 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளாலும் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் 100 பந்துகள் முடுவில் ஓவல் இன்விசிபிள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் சதர்ன் பிரேவ் மகளிர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஓவல் இன்விசிபிள் மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.