தி ஹண்ட்ரெட் 2022: பால் ஸ்டிர்லிங் காட்டடி; சதர்ன் பிரேவ் அபார வெற்றி!
இங்கிலாந்தில் நடந்துவரும் தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் - வெல்ஷ் ஃபையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த வேல்ஷ் ஃபையர் அணி வீரர்கள் ஜோ கிளார்க், பெத்தெல், ஜோஷ் காப், டங்கெட் என சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லரும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த லேஸ் டு ப்ளை - மேத்யூ கிரிட்ச்லி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் டு ப்ளை 37 ரன்களிலும், மேத்யூ கிரிட்ச்லி 32 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 100 பந்துகள் முடிவில் வேல்ஷ் ஃபையர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் ஜார்ஜ் கார்ட்டன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய சதர்ன் பிரேவ் அணிக்கு பால் ஸ்டிர்லிங் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டி காக் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய பால் ஸ்டிர்லிங் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் சதர்ன் பிரேவ் அணி 82 பந்துகளில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் வேல்ஷ் ஃபயர் அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பால் ஸ்டிர்லிங் 74 ரன்களோடு களத்தில் இருந்தார்.