தி ஹண்ட்ரட் 2023: சூப்பர்சார்ஜர்ஸை வீழ்த்தில் இன்விசிபில் த்ரில் வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் என்றழைக்கப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் நார்த்தன் சூப்பர்சார்ஜ்ஸ் - ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஓவல் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓவல் அணியில் ஜேசன் ராய் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் - ஜோர்டன் காஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஜோர்டன் காஸ் அரைசதம் கடந்து அசத்த, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ் 40 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசனும் அதிரடியாக விளையாடி 46 ரன்களில் ஆட்டமிழந்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்டன் காஸ் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 73 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் ஓவல் இன்விசிபில் அணி இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ ஷார்ட், ஹார் ப்ரூக் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இணைந்த டாம் பாண்டன் - ஆடம் ஹோஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் டாம் பாண்டன் அரைசதம் கடக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆடம் ஹோஸ் 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய சைஃப் ஸைப் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் 7 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 81 ரன்களை சேர்த்திருந்த டாம் பாண்டனும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்டமுடியாததால், சூப்பர்சார்ஜர்ஸ் அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஓவல் இன்விசிபில் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.