மழையால் கைவிடப்பட்டது இந்தியா - அயர்லாந்து ஆட்டம்!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு, ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இத்தொடரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. அதன்பின் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அயர்லாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறுவதாக இருந்தது. மேலும் அயர்லாந்து அணி இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே மழை பெய்த காரணத்தால் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வு தாமதமானது.
அதன்பின் மழை நின்றால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழை காரணமாக இப்போட்டி ஓவர்கள் வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.