எங்கள் தோல்விக்கான காரணம் இவர்தான் - டேவிட் வார்னர்!

Updated: Wed, Apr 05 2023 11:44 IST
Image Source: Google

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 36 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 39 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து 163 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி சாய் சுதர்சன், டேவிட் மில்லர், விஜய் சங்கர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியசாத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதில் சாய் சுதர்சன் 62 ரன்கள், மில்லர் 31 ரன்கள் அடித்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இப்போட்டி முடிந்தபின் பேட்டியளித்த டேவிட் வார்னர், “குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்து தாக்குதல் நடத்தியது எனக்கு ஆச்சரியமாக இல்லை. எதிர்பார்த்ததுதான். ஆனால் இந்த மைதானத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஸ்விங் ஆனது. இந்த மைதானத்தை குஜராத் அணியினர் நன்றாக உணர்ந்து விளையாடினார்கள். சொந்த மைதானத்தில் இன்னும் ஆறு போட்டிகள் இருக்கிறது. இவை அனைத்தையும் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வோம்.

இந்த போட்டியிலும் கடைசி வரை ஆட்டத்திற்குள் இருந்தோம். ஜெயித்து விடுவோம் என்றே நினைத்தேன். சாய் சுதர்சன் அபாரமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை எங்களிடம் இருந்து எடுத்துச் சென்றுவிட்டார். டேவிட் மில்லர் தன்னால் என்ன பண்ண முடியுமோ, அதை செய்துகாட்டினார். பனிப்பொழிவு சற்று அதிகமாகவே இருந்ததால், இந்த மைதானத்தில் 180-190 ரன்கள் அடிக்க வில்லை என்றால் கட்டுப்படுத்துவது கடினம் என்று உணர்ந்து கொண்டேன். அடுத்தடுத்த போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை