அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் டிம் பிரெஸ்னன் ஓய்வு!

Updated: Mon, Jan 31 2022 18:44 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் டிம் பிரெஸ்னன். தற்போது 36 வயதாகும் டிம் பிரெஸ்னன் இங்கிலாந்து அணிக்காக 23 டெஸ்ட், 85 ஒருநாள், 34 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த பிரெஸ்னன் கவுண்டி கிரிக்கெட் தொடரில் வார்விக்ஷயர் அணிக்காக விளையாடி வந்தார். 

இந்நிலையில் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவிப்பதாக டிம் பிரெஸ்னன் இன்று அறிவித்துள்ளார். இதனை வார்விக்ஷயர் கவுண்டி அணியும் உறுதிசெய்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது நம்பமுடியாத கடினமான முடிவு, ஆனால் குளிர்காலப் பயிற்சிக்குத் திரும்பிய பிறகு இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன். எனது 21ஆவது தொழில்முறை ஆண்டுக்கு தயாராவதற்காக, சீசன் முழுவதும் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன், ஆனால் எனக்கும் எனது அணியினருக்கும் நான் நிர்ணயித்த உயர் தரத்தை என்னால் அடைய முடியவில்லை என்று ஆழமாக உணர்கிறேன். நான் விரும்பும் விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் பசியும் உற்சாகமும் என்னை விட்டு விலகாது, ஆனால் 2022 சீசனை சமாளிக்க நான் தயாராக இருந்தாலும், என் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதன் காரணமாகவே நான் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் வார்விக்ஷயர் கவுண்டி அணிக்காக விளையாடிய டிம் பிரெஸ்னன், இதுவரை 7,138 ரன்களையும், 575 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 7 சதங்களும், 9 முறை ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை