ரசிகர்களின் பாராட்டு மழையில் டிம் சௌதி; காரணம் இதோ..!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதியின் செயல் தற்போது ரசிகர்கள் மத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அச்செயலானது புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 8 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக, அவர் தனது ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளார்.
இதுகுறித்து டிம் சௌதி கூறுகையில்“எனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளேன். இதில் கிடைக்கும் அனைத்து நிதியையும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது பெண் குழந்தை ஹோலி பீட்டி குடும்பத்திடம் அவரது சிகிச்சைக்காக கொடுக்க உள்ளேன். இது என்னால் முடிந்த ஒரு உதவி. இந்த ஜெர்சியை அவளுக்கு சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியில் ஓரளவாவது உதவும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த ஏல நடைமுறை வரும் ஜூலை 8 ஆம் தேதி மதியம் 1.45 மணி வரை நேரலையில் இருக்கும். இந்த ஜெர்சியில் அனைத்து நியூசிலாந்து அணி வீரர்களும் கையெழுத்து இட்டுள்ளனர். டிரேட்மி என்ற தளத்தில் இந்த ஏலம் நடந்து வருகிறது. இதுவரை இந்த ஜெர்சி 43,200 அமெரிக்க டாலர்களுக்கு விலை கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.