டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த திருச்சி வாரியர்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
இதில் இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீரமானிதது.
அதன்படி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ராதாகிருஷ்ணனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராதாகிருஷ்ணன் 82 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் சந்தோஷ் ஷிவ் 5 ரன்களிலும், அமித் சத்விக் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நிதிஷ் ராஜகோபால் - ஆதித்யா கணேஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் நிதிஷ் ராஜகோபால் 55 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆதித்யா கணேஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு ஆழைத்துச் சென்றார்.
இதன் மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி, முதல் முறையாக டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.