டிஎன்பிஎல் 2022: நெல்லையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!

Updated: Wed, Jul 27 2022 23:33 IST
Image Source: Google

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் சேலத்தில் இன்று நடைபெறும் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ், கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார். 

இதையடுத்து வந்த ஷாஜகான் 25, சஞ்சய் யாதவ் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், ராதகிருஷ்ணன் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியது ரசிகர்கள் ஏமாற்றமடைச் செய்தது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கௌஷிக் காந்தி - சாய் கிஷோர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கௌஷிக் காந்தி 40 ரன்களிலும், சாய் கிஷோர் 43 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் வந்த சசிதேவ்வும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜகோபால் சதீஷ் - ஹரிஷ் குமார் இணை பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தனர். 

இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தியதுடன், நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை