டிஎன்பிஎல் 2022: சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!

Updated: Tue, Jul 19 2022 22:32 IST
TNPL 2022: Chepauk Super Gillies beat Salem Spartans by 7 wickets (Image Source: Google)

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 6ஆவது சீசன் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் இன்று தொடங்கின.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து களம் இறங்கிய சேலம் அணியின் தொடக்க வீரர் கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார். ஜமால் 6 ரன்னுடன் வெளியேற, அக்சய் சீனிவாசன், டேரில் பெராரியோ ஆகியோர் அடுத்து டக் அவுட்டாகினர்.

ரவி கார்த்திகேயன் 12 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிஷேக் 23 ரன்களும், முருகன் அஸ்வின் 14 ரன்களும் அடித்து களத்தில் இருந்தனர். சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. சேப்பாக் வீரர் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 114 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணிக்கு கௌசிக் காந்தி - ஜெகதீசன் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கௌசிக் காந்தி 46 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெகதீசனும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய சோனு யாதவ் 7 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி என 26 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை