டிஎன்பிஎல் 2022 எலிமினேட்டர்: மதுரை பாந்தர்ஸை வெளியேற்றியது லைகா கோவை கிங்ஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று சேலத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முன்னதாக, டாஸ் வென்ற மதுரை பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 51 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை அஜித் ராம் மற்றும் அபிஷேக் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
எலிமினேட்டரில் வெற்றி பெற வெறும் 127 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை அணி அட்டகாசமாக ஆட்டத்தை தொடங்கி விக்கெட் இழப்பின்றி 9.5 ஓவர்களின் முடிவில் 72 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அந்த அணியின் அனுபவ வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்க அவருக்கு பக்கபலமாக விளையாடிய சுரேஷ் குமார் 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவரும் இறுதிவரை களத்தில் நீடித்தார்.
சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக டக்வர்த் லூயிஸ் முறையில் கோவை அணி 20 ரன்கள் கூடுதலாக மதுரையை விட பெற்றிருந்ததால் லைகா கோவை கிங்ஸ் எலிமினேட்டரில் வெற்றி பெற்றதாக போட்டி நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஜூலை 29ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள முதல் குவாலிஃபையரில் நெல்லை மற்றும் சேப்பாக் இடையேயான ஆட்டத்தில் தோல்வி பெறும் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் குவாலிஃபையர் இரண்டில் மோதவுள்ளது.