டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல் டிராகன்ஸ் எளிதில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!

Updated: Thu, Jul 07 2022 22:40 IST
Image Source: Twitter

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. துவக்க வீரர் விஷால் வைத்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் ஹரி நிஷாந்த் 24 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர். 

அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. மறுமுனையில் மோகித் ஹரிஹரன் மட்டும் சற்று தாக்குப்பிடித்து ஆடியதால், அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. மோகித் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 சேர்த்தது.

மதுரை பாந்தர்ஸ் தரப்பில் சன்னி சந்து 4 ஓவர்கள் வீசி, 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தார். 

இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணியில் விக்னேஷ் ஐயர் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த அருண் கார்த்திக் - பாலச்சந்தர் அனிரூத் இணை தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட அருண் கார்த்திக் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சதுர்வேத்தும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனிரூத் அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் 15.3 ஓவர்களிலேயே மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை