டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை பந்தாடியது மதுரை பாந்தர்ஸ்!

Updated: Sun, Jul 24 2022 22:02 IST
TNPL 2022: Madurai Panthers defeat Ruby Trichy Warriors by 36 runs (Image Source: Google)

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸும் ரூபி திருச்சி வாரியர்ஸும் மோதின.

சேலத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள் மிக சுமாராக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரரும் நட்சத்திர வீரருமான அருண் கார்த்திக் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஆதித்யா 34 பந்தில் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். 

பால்சந்தர் அனிருத் அதிரடியாக ஆடி26 பந்தில் 34 ரன்கள் அடித்தார். கௌசிக் 25 பந்தில் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். அனைத்து வீரர்களுமே மந்தமாக பேட்டிங் ஆடியதால் மதுரை பாந்தர்ஸ் அணியின் ஸ்கோர் உயரவே இல்லை. 7ஆம் வரிசையில் இறங்கிய சன்னி சந்து 8 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும்  3 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 136 ரன்கள் அடித்த மதுரை பாந்தர்ஸ் அணி, 137 ரன்கள் என்ற இலக்கை திருச்சி வாரியர்ஸூக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து 137 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சாத்விக் (23) மற்றும் சந்தோஷ் ஷிவ் (31) ஆகிய இருவரும் ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். திருச்சி அணி விரட்டிய இலக்கிற்கு அவர்கள் அமைத்து கொடுத்தது நல்ல தொடக்கமே. 

ஆனால் அதன்பின்னர் ஒரு வீரர் கூட சரியாக ஆடாததால் 18.4 ஓவரில் வெறும் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது திருச்சி அணி. மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜெகதீசன் கௌசிக் 4 விக்கெட் வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் கிரன் ஆகாஷ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை