டிஎன்பிஎல் 2022: ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!

Updated: Sat, Jun 25 2022 22:56 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்ட்டான்ஸை எதிர்கொண்டது.

நெல்லையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜாஃபர் ஜமால் 11 ரன்னிலும், கோபிநாத் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

இதனால் 30 ரன்களுக்கே சேலம் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும், 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரைல் ஃபெராரியோ மற்றும் கவின் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

3வது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 91 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய கவின் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை 2 ரன்னில் தவறவிட்டார். அதன்பின்னர் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ஃபெராரியோ 49 பந்தில் 60 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 

அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 149 ரன்கள் அடித்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 150 ரன்கள் என்ற சவாலான இலக்கை நெல்லை அணிக்கு நிர்ணயித்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திய நெல்லை அணியின் தொடக்க வீரர் பிரதோஷ் பால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் சூர்யபிரகாஷ் - பாபா அபாரஜித் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் சூர்யபிரகாஷ் 35 ரன்களிலும், அபாரஜித் 32 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த இந்திரஜித் 15, சஞ்சய் யாதவ் 0 என அடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர்.  

இதையடுத்து வந்த அஜித்தேஷ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 48 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை