ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டாப் 5 அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்; குர்பாஸ் முதல் ஸத்ரான் வரை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தியதுடன, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் 20 அணிகள் பங்கேற்றிருந்த நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 வீரர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரஹ்மனுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz)
இப்பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 8 இன்னிங்ஸில் விளையாடி 3 அரைசதங்களுடன் 281 ரன்களைக் குவித்து இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் அவர் 18 பவுண்டரிகளையும், 16 சிக்ஸர்களையும் விளாசி அசத்தியுள்ளார். மேலும் அவர் கடைசி இரண்டு போட்டிகளில் பெரிதளவில் ரன்களை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா (Rohit Sharma)
இந்த பட்டியலில் இந்திய அணியின் அதிரடிய தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மாவிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளில் பெரிதளவில் சோபிக்க தவறிய ரோஹித் சர்மா சூப்பர் 8 மற்றும் அரையிறுதி போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்துள்ளார். அதன்படி 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 அரைசதங்களுடன் 257 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 24 பவுண்டரிகளையும், 15 சிக்ஸர்களையும் அடித்துள்ளாதுடன், அவரது அதிகபட்ச ஸ்கோராக 92 ரன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிராவிஸ் ஹெட் (Travis Head)
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் இந்த பட்டியலின் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது பலருக்கும் ஆச்சரிமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த டிராவிஸ் ஹெட், இந்த உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடாதது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிஸ் ஹெட் 2 அரைசதங்களுடன் 255 ரன்களைச் சேர்த்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குயின்டன் டி காக் (Quinton de Kock)
இந்த பட்டியளில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக். இந்த உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டி வரை முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் குயின்டன் டி காக். இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய குயின்டன் டி காக் இரண்டு அரைசதங்களுடன் 243 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதில் அவர் 13 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகளை விளாசியுள்ளதுடன், அதிகபட்சமாக 74 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்ராஹிம் ஸத்ரான் (Ibrahim Zadran)
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்த பட்டியலில் 5ஆம் இடத்தை ஆஃப்கானிஸ்தான் அணியின் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரான் பிடித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடியுள்ள இப்ராஹிம் ஸத்ரான் 2 அரைசதங்களுடன் 231 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் அவர் 25 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்துள்ளார். மேலும் அவரது தனிநபர் அதிகபட்சமாக 70 ரன்களை அடித்துள்ளார். மேலும் இந்த பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன், அமெரிக்க அணியின் ஆண்ட்ரிஸ் கௌஸ், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.