U19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி!
அண்டர் 19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஹர்னூர் கான், அங்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து களமிறங்கிய ஷேக் ரஷீத் அதிரடியாக விளையாடி 90 ரன்களைச் சேர்த்து, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் கேப்டன் ரகிபுல் ஹசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்திய வங்கதேச அணி வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். அந்த அணியில் அரிஃபுல் இஸ்லாம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களைச் சேர்த்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் 38.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன் மூலம் இந்திய அண்டர் 19 அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அண்டர் 19 அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மேலும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.