அண்டர் 19 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 14ஆவது அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் நேற்று வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அண்டர் 19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 40.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அக்கீம் அகஸ்டே 57 ரன்களையும், கிளார்க் 37 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் கூப்பர், ராதாகிருஷ்ணன், டாம் வைட்னி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கோரி மில்லர், ஐசக் ஹிக்கிங்ஸ் ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டீக் வில்லி அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதில் டிக் வில்லி 86 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி 44.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணியை வீழ்த்தியது.